தக்காளி எலுமிச்சை ரசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பருப்பு - 1/4 கப்

தக்காளி - 2 (அரைக்க)

தக்காளி - 1

எலுமிச்சை - 1

பூண்டு - 5 பல்

ரசப் பொடி - தேவையான அளவு

கொத்தமல்லி தழை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

நெய் - சிறிது

கடுகு - 1/4 தேக்கரண்டி

வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

இரண்டு தக்காளிகளை அரைத்துக் கொள்ளவும். ஒரு தக்காளியை நறுக்கி வைக்கவும். பருப்பை குழைய வேக வைத்து தண்ணீர் சேர்த்து கடைந்து கொள்ளவும்.

ஒரு கடாயில் சிறிதளவு நெய் விட்டு கடுகு, வெந்தயம் போட்டு பொரிந்ததும் இரண்டாக கிள்ளிய காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

இதில் தக்காளி விழுது சேர்த்து அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.

இதில் பருப்பு தண்ணீர் ஊற்றவும். இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

ரசப்பொடி 2 தேக்கரண்டி சேர்க்கவும். (ரசப்பொடியில் ஒரு கப் சீரகம், அரை கப் மிளகு மற்றும் 5 அல்லது 6 காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து உள்ளேன்.)

ரசம் ஒரு கொதி வந்ததும் பூண்டை தோலுடன் தட்டி ரசத்தில் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

ஒரு பாத்திரத்தில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து கொள்ளவும். அதனுடன் சிறிது கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் ஒரு துளி நெய் விட்டு தயாராக வைக்கவும். இதில் ரசத்தை ஊற்றி பரிமாறவும்.

குறிப்புகள்:

இந்த குறிப்பு தொலைக்காட்சியில் பார்த்து கற்று கொண்டது. எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யும் ரசம் இது. கொத்தமல்லி காம்பு தான் ரசத்துக்கு வாசம் தரும். அதனால் வேர்ப்பகுதியை மட்டும் நறுக்கிவிட்டு தழையுடன் காம்பையும் போடலாம்.