ஆம்பூர் ஸ்டார் பிரியாணி

on on on on off 6 - Great!
4 நட்சத்திரங்கள் - 6 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1/2 கிலோ

பாஸ்மதி அரிசி – 3 கப்

இஞ்சி விழுது – 1 மேஜை கரண்டி

பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி

தயிர் – 2 மேஜை கரண்டி

உப்பு – தேவையான அளவு

------------------------------

-- நறுக்கி கொள்ள : --

------------------------------

வெங்காயம் – 2

தக்காளி – 2 பெரியது

புதினா, கொத்தமல்லி – 1 கைபிடி

------------------------------

-- ஊறவைத்து அரைத்து கொள்ள : --

------------------------------

காய்ந்த மிளகாய் – 6 – 8 (காரத்திற்கு ஏற்றாற் போல)

------------------------------

-- முதலில் தாளிக்க : --

------------------------------

எண்ணெய் – 1 மேஜை கரண்டி

நெய் – 1 மேஜை கரண்டி

பட்டை - தேவையான அளவு

கிராம்பு - தேவையான அளவு

ஏலக்காய் - தேவையான அளவு

செய்முறை:

சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம் + தக்காளி நீளமாக வெட்டி வைக்கவும். புதினா, கொத்தமல்லியினை நறுக்கி கொள்ளவும். அரிசியினை தண்ணீரில் 10 – 15 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும். காய்ந்த மிளகாயினை தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து கொண்டு மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய்+ நெய் சேர்த்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து பிறகு, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பூண்டு நன்றாக வதங்கிய பிறகு இஞ்சி விழுது சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

பிறகு அரைத்த காய்ந்த மிளகாய் விழுதினை சேர்த்து வதக்கவும்.

இத்துடன் சிக்கனை சேர்த்து 2 – 3 நிமிடங்கள் வதக்கவும்.

இதன் பின், நறுக்கிய புதினா + கொத்தமல்லி சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து 1 – 2 நிமிடங்கள் வதக்கிய பிறகு, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கிய பிறகு தயிர் + தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும். பிறகு அதில் ஊறவைத்துள்ள பாஸ்மதி அரிசியினை சேர்த்து 3/4 பாகம்(75 %) வேகவைத்து கொள்ளவும். பிறகு தண்ணீர் வடித்து கொள்ளவும்.

சிக்கனில் இருந்து தண்ணீர் முக்கால் வாசி வற்றிய பிறகு, வேகவைத்துள்ள சாதத்தினை இதில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறவும்.(கவனிக்க : சிக்கன் மசாலா சாதத்தில் நன்றாக கலக்கிவிடவும்.)

இப்பொழுது இதனை அப்படியே தம் போட்டு வேகவைக்கலாம். நான் அவனை 375 Fயில் 15 நிமிடங்கள் வேகவைத்தேன்.

சுவையான ஆம்பூர் பிரியாணி ரெடி. இதனை தயிர் பச்சடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்புகள்:

முதலில் பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பிறகு இஞ்சி விழுது சேர்த்து வதக்க வேண்டும்.

பச்சை மிளகாய் அல்லது மிளகாய் தூள் சேர்க்க கூடாது. அதற்கு பதிலாக காய்ந்த மிளகாயினை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்த பிறகு மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து காரத்திற்கு ஏற்றாற் போல சேர்த்து கொள்ள வேண்டும்.

வெங்காயம் + தக்காளி போன்றவையினை சிக்கன் (அல்லது) மட்டன் சிறிது நேரம் வெந்த பிறகு தான் சேர்க்க வேண்டும். முதலிலே வதக்க கூடாது.

தயிர் 1 மேஜைகரண்டி அளவு சேர்த்தால் போதும். அதிகம் சேர்க்க கூடாது.

நன்றாக பழுத்த தக்காளி சேர்த்து கொண்டால் சுவையாக கலர்புல்லாக இருக்கும்.

தனியாக கலர் அல்லது மஞ்சள் தூள் எதுவும் சேர்க்க வேண்டாம்.

காய்ந்த மிளகாய் விழுதினை சேர்த்த பிறகு காரம் குறைவாக இருப்பதாக தெரிந்தால் பச்சை மிளகாயினை சேர்த்து கொள்ளவும்.

அதே மாதிரி காய்ந்த மிளகாயில் இருந்து வரும் கலரே போதுமானதாக இருக்கும். சில மிளகாயில் கலர் வராது. அப்படி இருக்கும் பொழுது விரும்பினால் கலர் சேர்த்து கொள்ளவும்.