நாண் (4)

on off off off off 1 - Poor!
1 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மைதா - 1 கிலோ

முட்டை - 3

பால் - 1/2 லிட்டர்

சீனி - 100 கிராம்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மாவைக் குவித்து வைத்து, மத்தியில் சிறிய குளம் போல் செய்து அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அத்துடன் பால், சீனி மற்றும் உப்பு சேர்க்கவும்.

இவையனைத்தையும் தண்ணீர் ஊற்றி பிசையவும். அதிகம் தண்ணீர் ஊற்றிவிடாமல், சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

மாவினை நன்கு பிசைந்து, பெரிய உருண்டையாக உருட்டி வைத்து அதன் மேல்புறத்தில் எண்ணெய் தடவவும். இதனை மாலிஷ் செய்தல் என்று சொல்லுவர். இப்படி செய்வதால் மாவு நன்கு இளகிய பதமாக மாறும்.

பின்னர் அந்த மாவினை ஈரத்துணிக் கொண்டு மூடிவிடவும். சுமார் ஒரு மணி நேரம் இப்படி ஊறவிடவும்.

20 நிமிடங்களுக்கு ஒரு முறை துணியை எடுத்துவிட்டு, கையை குவித்து வைத்து, புறங்கை பகுதியால் மாவினை நன்கு அழுத்தி பிசையவும். இப்படி பிசைவதினால் மாவு நல்ல பதத்திற்கு மாறும். நாண் மிகவும் சாஃப்டாக கிடைக்கும்.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு மாவினை நாண்களாக தேய்க்கலாம். ஆரஞ்சு பழ அளவு உருண்டைகளாக மாவை உருட்டி, அதனை கையாலேயே தட்டி நாண் செய்யலாம். அல்லது சப்பாத்தி கட்டையால் தேய்த்தும் செய்யலாம்.

கையினால் ஓரளவிற்கு வட்டமாக தட்டிக் கொண்ட பிறகு, அதனை எடுத்து இரண்டு கைகளிலும் மாற்றி மாற்றி போட்டு, மாவினை சற்று இழுத்துவிட்டவாறு நாணை பெரிதாக்குவர். இது உணவுவிடுதிகளில் மாஸ்டர்கள் செய்யும் முறை. பழக்கம் இல்லாதவர்கள் சாதாரணமாக சப்பாத்தி கட்டையால் தேவையான அளவிற்கு மாவினை விரித்துக் கொள்ளலாம்.

மாவை விரித்து அதன் ஒரு புறத்தை இழுத்து நீள் வட்டமாக மாற்றிக் கொள்ளவும். பின்னர் ஒரு துணியை பந்தாக சுருட்டி கையில் வைத்துக் கொண்டு, அதில் நாணை வைத்து தந்தூரி அடுப்பில் ஒட்டவும். துணியினால் நாணை சற்று அழுத்திவிடவும்.

பொதுவாக நாண் வட்டமாக இல்லாமல் கோழி முட்டை வடிவில் செய்யப்படும். இது தந்தூரி அடுப்பில் வைத்து தயாரிக்கப்படுவதால், அதில் ஒட்டி, வேக வைத்து எடுக்க வசதியாக இந்த வடிவத்தில் செய்வர். குறுகிய பாகம் அடுப்பின் உட்பக்கத்தை நோக்கி இருக்கும். இதனால் கீழிருந்து வரும் வெப்பம் நாணின் அகன்ற பாகத்திற்கும் எளிதாகச் செல்லும்.

நாண் வெந்தவுடன் அதனை இரண்டு கம்பிகள் கொண்டு எடுக்கவும். அதிகம் கருகவிடாமல், பதமாய் வெந்தவுடன் எடுத்துவிடவேண்டும்.

வெளியே எடுத்த பிறகு நாணின் மீது சிறிது வெண்ணெய் தடவவும். ஸ்டப்டு நாண் செய்வதற்கு, மாவினை நாணாக தேய்க்கும் முன்பே அதில் நாம் சேர்க்க விரும்பும் மசாலா, இதரப் பொருட்களை வைத்து பின்னர் தேய்த்து, சுட்டெடுக்க வேண்டும்.

குறிப்புகள்: