குதிரைவாலி தோசை
தேவையான பொருட்கள்:
குதிரைவாலி - 2 கப்
குண்டு உளுந்து (அ) பொட்டு உளுந்து - 1 கப்
வெந்தயம் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
குதிரைவாலியை 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
குண்டு உளுந்தையும் நன்றாகக் கழுவி அதிகமாக தண்ணீர் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து ஊறவிடவும். (அரிசி மாவு அரைக்கும் போதும் இதே முறையில் ஃப்ரிட்ஜில் வைத்தெடுத்து அரைத்தால் மாவு நன்றாக நுரைத்து வரும். நீர்த்துப் போகாது. கறுப்பு உளுந்தாக இருந்தால் ஃப்ரிட்ஜில் வைக்கத் தேவையில்லை).
பிறகு கிரைண்டரில் ஊறவைக்காத வெந்தயத்தைக் களைந்து போட்டு அரைக்கவும். 2 நிமிடங்கள் கழித்து ஊறவைத்த உளுந்தைப் போட்டு நுரைக்க அரைத்தெடுக்கவும். அதன் பிறகு குதிரைவாலியைப் போட்டு நைசாக அரைத்தெடுத்து உளுந்து மாவுடன் சேர்க்கவும். அதனுடன் உப்புப் போட்டு கலந்து வைக்கவும்.
8 மணி நேரம் கழித்து பார்த்தால் மாவு புளித்திருக்கும். அடுப்பில் தோசைக்கல்லை காயவைத்து தோசை மாவை எடுத்து ஊற்றி சற்று மெல்லிய தோசைகளாக வார்த்தெடுக்கவும்.
குறிப்புகள்:
குதிரைவாலியை ஊறவைக்கும் போது நன்றாக களைந்து ஊறவைத்தால் அதிக சத்துக்கள் வீணாகாமலிருக்கும்.
இந்த மாவில் நறுக்கிய கேரட், வெங்காயம் சேர்த்து கலந்து பணியாரமாகவும் ஊற்றி எடுக்கலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.