எலுமிச்சை நூடுல்ஸ்
தேவையான பொருட்கள்:
அரிசியால் தயாரித்த நூடுல்ஸ் - 1/2 கிலோ பொதி
எலுமிச்சைரசம் - 1/4 கோப்பை
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் - 4
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 2 பற்கள்
வறுத்த வேர்கடலை - ஒரு கைப்பிடி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு பிடி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு தூள் - தேவையான அளவு
செய்முறை:
அரிசி நூடுல்ஸ்ஸை, உப்பு கலந்த கொதிக்கும் நீரில் போட்டு பொதியில் உள்ள விதிமுறைக்கேற்ப வேகவைத்து அல்லது ஊற வைத்து வடித்துக் கொள்ளவும்.
பிறகு அதை குளிர்ந்த நீரில் போட்டு மீண்டும் வடித்து வைக்கவும்.
எலுமிச்சைரசத்துடன் உப்புத்தூளைச் சேர்த்து கலக்கி வைக்கவும்.
ஒரு வாயகன்ற சட்டியில் எண்ணெயை ஊற்றி காயவைக்கவும். பிறகு அதில் கடுகைப்போட்டு வெடித்ததும் காய்ந்தமிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும்.
பிறகு கறிவேப்பிலை, பச்சைமிளகாய், நசுக்கிய பூண்டையும் போட்டு வதக்கி தொடர்ந்து மஞ்சள்தூளை போட்டு வதக்கி நூடுல்ஸ் மீது கொட்டவும்.
தொடர்ந்து எலுமிச்சைரசத்தை தெளித்து நன்கு கிளறி விடவும்.
பிறகு வறுத்த வேர்கடலையை ஒன்றும் பாதியுமாக உடைத்து மேலாக போட்டு கொத்தமல்லியையும் மேலாக தூவி அலங்கரித்து பரிமாறவும்.