உருளை பணியாரம்
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 4
சின்ன வெங்காயம் - 15
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
திக்கான புளி விழுது - 1 மேசைக்கரண்டி
இட்லி மாவு - 1 கப்
பச்சை மிளகாய் - 1
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கல் உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சின்ன வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும்.
உருளைக்கிழங்கை இரண்டாக நறுக்கி குக்கரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மூடி 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வேக வைத்து எடுத்த உருளைக்கிழங்கை தோலுரித்து மசித்து விடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து பச்சை மிளகாயை போட்டு 30 நொடி வதக்கவும்.
அதனுடன் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு நன்கு ஒரு நிமிடம் வதக்கவும்.
அதில் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மசித்து விட்டு கிளறி விடவும்.
அதனுடன் புளி விழுதை ஊற்றி நன்கு ஒரு நிமிடம் கிளறி இறக்கவும்.
மசாலாவை பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். அடுப்பில் பணியார சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றவும். உருட்டி வைத்த உருண்டைகளை இட்லி மாவில் தோய்த்து எடுக்கவும்.
அதை பணியார சட்டியின் குழியில் வைத்து மேலே எண்ணெய் ஊற்றி வேக விடவும்.
2 நிமிடம் கழித்து பணியாரம் எடுக்கும் குச்சியை வைத்து திருப்பி விடவும். பிறகு 2 நிமிடம் கழித்து வெந்ததும் எடுக்கவும்.