அவல் உப்புமா (2)
தேவையான பொருட்கள்:
அவல் - 1 கப்
புளித்தண்ணீர் - 1/4 கப்
வெல்லத் தூள் - 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
பெருங்காயத் தூள் - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 1/4 கப்
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கடுகு - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பெரிய வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புளித்தண்ணீருடன் உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும். முறத்தில் அவலை போட்டு புடைத்து சுத்தம் செய்துக் கொள்ளவும்.
மிளகாய் வற்றலை இரண்டாக பிய்த்து வைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த அவலை போட்டு தண்ணீர் ஊற்றி அலசிக் கொள்ளவும். கெட்டி அவல் என்றால் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த அவலுடன் புளித்தண்ணீரை ஊற்றி மஞ்சள் தூள், மிளகாய் தூள், வெல்லம் சேர்க்கவும்.
அதன் பின்னர் அனைத்தையும் ஒன்றாக கலந்து சுமார் ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, மிளகாய் வற்றல், கடலை பருப்பு, கறிவேப்பிலை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
ஒரு நிமிடம் கழித்து பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அதில் ஊற வைத்த அவலை போட்டு பிரட்டி விடவும். அதனுடன் தேங்காய் துருவலையும் சேர்க்கவும்.
வதங்கிய வெங்காயத்துடன் அவல் மற்றும் தேங்காய் துருவல் ஒன்றாக கலந்ததும், மீண்டும் ஒரு முறை நன்கு கிளறி இறக்கி விடவும்.
இது எளிதில் செய்யக்கூடிய மாலை நேர சிற்றுண்டி. மேலே கொத்தமல்லித் தழை தூவி சூடாக பரிமாறவும்.