வறுத்து அரைத்த மீன் கறி
தேவையான பொருட்கள்:
மீன் (சுறா மீன், துனா மீன் தவிர்த்து) - 500 கிராம்
தேங்காய் துருவல் - 3/4 கப்
சின்ன வெங்காயம் - 6 அல்லது 7
பூண்டு - 20 பல்
மிளகு - 1 தேக்கரண்டி
சுக்கு - 2 அங்குல துண்டு
ஓமம் - 1 மேசைக்கரண்டி
பெருங்கயம் - 1/2 தேக்கரண்டி
மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி அல்லது காரத்திற்கு ஏற்ப
மல்லிதூள் - 1 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
புளி - சிறிய எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை - 2 அல்லது 3 இனுக்கு
நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மீனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கி மிளகு சேர்த்து வெடித்ததும் சின்ன வெங்காயம், 6 பல் பூண்டு, 2 கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் முக்கால் பாகம் வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
தேங்காய் துருவல் பிரவுன் நிறமானதும் சுக்கு(லேசாக தட்டிக் கொள்ளவும்) ஓமம் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கி பொடி வகைகள் பெருங்காயம் சேர்த்து கிளறி இறக்கி விடவும். வாணலியின் சூட்டிலேயே பொடிகள் வறுபட்டு விடும்.
ஆறியதும் மிக்ஸியில் போட்டு முதலில் தண்ணீர் சேர்க்காமல் பொடித்து கொண்டு பின்னர் தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கலவையில் மீதமுள்ள பூண்டு, கறிவேப்பிலை, புளிக்கரைசல், உப்பு சேர்த்து கலந்து உப்பு புளி காரத்தின் அளவை சரிபார்த்துக் கொள்ளவும்.
மீன் துண்டுகளை சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.
குழம்பு நன்றாக கொதி வந்ததும் 7 நிமிடங்கள் அதிக தீயில் கொதிக்க விட்டு பின் தீயைக் குறைத்து மேலும் 5 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
மீன் சாப்பிடாதவர்கள் முருங்கைக்காய் அல்லது வெறுமனே பூண்டு சேர்த்தும் இக்குழம்பு செய்யலாம்.
தினமும் சூடாக்கி வைத்தால் 3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.