வறுத்து அரைத்த சிக்கன் குழம்பு
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 1/4 கிலோ
தக்காளி - 1
தேங்காய் - ஒரு மூடி
காய்ந்த மிளகாய் - 5
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
தனியா - 1 மேசைக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை - 10 இலைகள்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 10 இலைகள்
நசுக்கிய பூண்டு - 5
நசுக்கிய சின்ன வெங்காயம் - 8
இரண்டாக கீறிய பச்சை மிளகாய் - 1
செய்முறை:
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும்.
வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், சீரகம், மிளகு, தனியா, சோம்பு, 4 பல் பூண்டு, வட்டமாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தேங்காய் சேர்த்து நன்கு சிவக்க வதக்கி ஆறவைக்கவும்.
நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
சட்டியில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, நசுக்கிய பூண்டு, நசுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் சிக்கனைச் சேர்த்து வதக்கவும். சிக்கன் லேசாக வதங்கியதும், இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
நன்கு கிளறிவிட்டு மூடி போட்டு எண்ணெய் பிரியும் வரை வைத்திருக்கவும்.
அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் உப்புச் சேர்த்து கிளறிவிட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து பச்சை வாசம் போனதும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
சாதம், இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, ஆப்பம் என அனைத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.