நாஞ்சில் மீன் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மீன் (ஏதேனும் வகை) - 6 முதல் 7 துண்டுகள்

புளி - சின்ன எலுமிச்சம் பழ அளவு

பச்சைமிளகாய் - 2

உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைக்க:

தேங்காய் - ஒரு சிறிய மூடி

பெரிய வெங்காயம் – 1 அல்லது சின்ன வெங்காயம் - 8

மல்லி விதைகள்(தனியா) - 3 மேசைக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 10

பெருஞ்சீரகம் - 1 மேசைக்கரண்டி

மிளகு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை – 3 நெட்டுகள்

தாளிக்க:

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

வெந்தயம் - 1 தேக்கரண்டி

செய்முறை:

மீன் துண்டுகளை நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.

பச்சைமிளகாயை நீளவாக்கில் இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். புளியை ஊறவைத்து கரைத்து கொள்ளவும். அதனுடன் ஒரு நெட்டு கறிவேப்பிலை, நறுக்கியப் பச்சைமிளகாய் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.

பெரிய வெங்காயத்தை சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பயன்படுத்துவதாக இருந்தால் நறுக்க தேவையில்லை. மற்ற அரைக்க வேண்டியப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

தேங்காயை சிறு துருவல்களாக துருவி எடுத்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து அரை மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் தேங்காய் துருவல், வெங்காயம், மல்லி, காய்ந்த மிளகாய், மிளகு, பெருஞ்சீரகம் மற்றும் இரண்டு நெட்டு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். தேங்காய் துருவல் நன்கு பொன்னிறமாக பொலபொலவென்று ஆகும் வரை வறுக்க வேண்டும்.

வறுத்தப் பொருட்களை ஐந்து நிமிடங்கள் ஆற வைக்கவும். பிறகு மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்கு பொடித்துக் கொள்ளவும்.

அதில் அரைகப் தண்ணீர் சேர்த்து நன்கு மைப் போல் மீண்டும் அரைத்துக் கொள்ளவும். (முதலிலேயே தண்ணீர் சேர்த்து அரைத்தால் நன்றாக அரையாது, மை போல் அரைத்தால் தான் இதன் சுவை கூடும்.)

ஏற்கனவே கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலுடன் இந்த விழுதை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்கு குழம்பு போல் கலக்கி வைத்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து அரை மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயத்தை போட்டு தாளிக்கவும். வெந்தயம் பொன்னிறமானதும் கரைத்து வைத்துள்ள குழம்புக் கலவையை ஊற்றவும்.

குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் சுத்தம் செய்த மீன் துண்டுகளை சேர்க்கவும். குழம்பு பாத்திரத்தை மூடி வைக்கும் பொழுது மூடியை சிறிது திறந்திருக்குமாறு வைத்து பத்து நிமிடங்கள் மிதமான தீயில் வேக விடவும். சுவையான நாஞ்சில் மீன் குழம்பு தயார்.

குறிப்புகள்:

இந்த மீன் குழம்பை மண் சட்டியில் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

இதில் மீன் துண்டுகளுடன் முருங்கைக்காய் சேர்த்து செய்தால் வாசமாக இருக்கும். கண்டிப்பாக ஒரு முறை முருங்கைக்காய் சேர்த்தும் செய்து பாருங்கள்.

மத்தி மற்றும் நெத்திலி மீன்களுடன் கத்தரிக்காயை துண்டுகளாக நறுக்கி சேர்த்தும் செய்யலாம்.

இந்த குழம்பை சூடாக்கி இரண்டு நாட்கள் வைத்திருந்து சாப்பிடலாம். அடுத்த நாள் சாப்பிடும்பொழுது இதன் சுவை இன்னும் கூடும்.