வெஜிடபிள் பிரிஞ்சி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - நான்கு கோப்பை

கேரட் - ஒரு கோப்பை

பட்டாணி - அரைக்கோப்பை

பீன்ஸ் - ஒரு கோப்பை

நறுக்கிய நூல்கோல் - ஒரு கோப்பை

நறுக்கிய உருளைக்கிழங்கு - ஒரு கோப்பை

வெங்காயம் - கால்கிலோ

தக்காளி - கால் கிலோ

பச்சைமிளகாய் - பத்து

சீரகம் - அரை தேக்கரண்டி

இஞ்சி - இரண்டு அங்குலத்துண்டு

பூண்டு - ஆறு பற்கள்

பட்டை - நான்கு துண்டு

கிராம்பு - ஆறு

ஏலக்காய் - நான்கு

மராட்டிமொக்கு - ஒன்று

பிரிஞ்சி இலை - இரண்டு

உப்புத்தூள் - ஒரு மேசைக்கரண்டி

மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி

தேங்காய் - ஒரு மூடி

கொத்தமல்லி - ஒரு கட்டு

புதினா - ஒரு கட்டு

கறிவேப்பிலை - இரண்டு கொத்து

எலுமிச்சைபழம் - ஒரு மூடி

எண்ணெய் - கால் கோப்பை

நெய் அல்லது வனஸ்பதி - கால் கோப்பை

ரொட்டி துண்டுகள் - ஒரு கோப்பை

செய்முறை:

அரிசியைக் கழுவி தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.

காய்கறிகளை அரைவேக்காடாக வேகவைத்து வடித்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.

இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், சீரகம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து வைக்கவும்.

வாசனைப் பொருட்களை பொடித்து வைக்கவும்.

தேங்காயை துருவி நன்கு அரைத்து ஒரு கோப்பை கெட்டியான பால் எடுத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெயையும் நெய்யையும் கலந்து ஊற்றி காயவைக்கவும். அதில் அலங்கரிக்க தேவையான ரொட்டி துண்டுகள் மற்றும் நறுக்கிய வெங்காயத்தில் சிறிதை அதில் போட்டு சிவக்க வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

பிறகு அதே எண்ணெயில் பிரிஞ்சி இலையைப் போடவும். தொடர்ந்து வெங்காயத்தைப் போட்டு சிவக்க வதக்கவும்.

பிறகு வாசனைபொடியைப் போட்டு வதக்கி இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு நன்கு வதக்கவும்.

பிறகு தக்காளி, மஞ்சள்தூள், கறிவேப்பிலைப் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி விட்டு கொத்தமல்லி, புதினாவில் பாதியைப் போட்டு வதக்கவும்.

பிறகு ஊறிய அரிசியை தண்ணீரில்லாமல் வடித்து விட்டு அதையும் சேர்த்து நன்கு வதக்கவும். அரிசியில் உள்ள நீர் அனைத்தும் சுண்டியவுடன் காய்கறிகளைச் சேர்த்து கலக்கவும்.

பிறகு அதில் தேங்காய்ப் பாலை ஊற்றி தண்ணீர் ஏழு கோப்பை அளந்து ஊற்றி உப்பைச் சேர்த்து நன்கு கலக்கி விட்டு கொதிக்கவிடவும்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது மூடியை போட்டு அடுப்பின் அனலை குறைத்து வைக்கவும்.

இருபது நிமிடங்கள் கழித்து மூடியைத் திறந்து எலுமிச்சை சாற்றை பிழிந்து விட்டு மீதியுள்ள கொத்தமல்லி புதினா தழைகளை போட்டு கிளறி விடவும்.

பரிமாறும் முன் வறுத்து வைத்துள்ள ரொட்டி துண்டுகள், வெங்காயத்தை மேலாகப் போட்டு அலங்கரித்து, தயிர் பச்சடியுடன் சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்:

தண்ணீரைச் சேர்க்கும் பொழுது காய்கறிகள் வெந்த நீரை பயன்படுத்தலாம்.