மீன் பிரியாணி (9)

on on on on off 3 - Great!
4 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மீன் – 1/2 கிலோ( சுமார் 6 - 8 துண்டுகள்)

பஸ்மதி அரிசி – 2 கப்

மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி

தயிர் – 1 கப்

எலுமிச்சை சாறு – 1 மேஜை கரண்டி

எண்ணெய் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

---------------------------------------

இஞ்சி பூண்டு விழுது (கீழே உள்ள பொருட்கள்) - சுமார் 2 அல்லது 3 மேஜை கரண்டி

---------------------------------------

இஞ்சி – 1 துண்டு

பூண்டு – 6 பெரிய பல்

பட்டை, கிராம்பு, ஏலக்காய் – 1

---------------------------------------

மீன் ஊறவைக்க

---------------------------------------

எண்ணெய் – 1 மேஜை கரண்டி

மஞ்சள் தூள் – 1 தே.கரண்டி

மிளகாய் தூள் – 2 தே.கரண்டி

உப்பு – தேவையான அளவு

---------------------------------------

நறுக்கி வைக்க

---------------------------------------

வெங்காயம் – 2

தக்காளி – 1

பச்சைமிளகாய் – 4

புதினா, கொத்தமல்லி – சிறிதளவு

---------------------------------------

அரிசி வேகவைக்கும் பொழுது:

---------------------------------------

எண்ணெய் – 1 மேஜை கரண்டி

உப்பு – 1 தே.கரண்டி

பட்டை, கிராம்பு, ஏலக்காய் – 1

பிரியாணி இலை – 1

நெய் – 1 தே.கரண்டி

செய்முறை:

மீனை சுத்தம் செய்து மீனில் ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும். அரிசியினை நன்றாக கழுவி அதனையும் குறைந்தது 20 – 25 நிமிடங்கள் ஊறவிடவும்.

வெங்காயம் + தக்காளியினை நீட்டாக வெட்டி கொள்ளவும். புதினா + கொத்தமல்லியினை பொடியாக நறுக்கி வைக்கவும். பச்சைமிளகாயினை இரண்டாக கீறிவைக்கவும். இஞ்சி பூண்டு விழுதினை மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும்.

கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி ஊறவைத்துள்ள மீனை வறுத்து தனியாக ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். ( கவனிக்க: மீனை 70% வறுத்தால் போதும். மீன் வறுக்கும் பொழுது ஒவ்வொரு பக்கமும் சுமார் 1 நிமிடம் வறுத்தல் போதும். மீனை மொருமொருப்பாகும் வரை வறுக்க கூடாது)

மீன் துண்டுகள் அனைத்தும் வறுத்த பிறகு, அதே எண்ணெயில் வெட்டி வைத்துள்ள வெங்காயத்தினை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

இஞ்சி பூண்டு விழுது வதங்கியவுடன், பச்சைமிளகாய் + தக்காளி + புதினா, கொத்தமல்லியினை சேர்த்து 2 – 3 நிமிடங்கள் வதக்கவும்.

இந்த சமயத்தில் ஒரு பாத்திரத்தில் முக்கால்வாசி தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். நன்றாக கொதிக்கும் பொழுது, அரிசி வேகக்கும் பொழுது கொடுத்துள்ள பொருட்களை + ஊறவைத்துள்ள பாஸ்மதி அரிசி சேர்த்து 5 – 6 நிமிடங்கள் வேகவிடவும். அரிசி வெந்தவுடன் அதனை தண்ணீர் இல்லாமல் வடித்து கொள்ளவும். (கவனிக்க :அரிசி சுமார் 80% வெந்தால் போதும். அதிகமாக வேகவிட வேண்டாம். அரிசி வேகவைத்த தண்ணீரை 1 கப் தனியாக எடுத்து கொள்ளவும்)

தக்காளி வதங்கியவுடன் அத்துடன் மஞ்சள் தூள் + தேவையான அளவு உப்பு + தயிர்,எலுமிச்சை சாறு சேர்த்து மேலும் 2 – 3 நிமிடங்கள் வேகவிடவும்.

இந்த க்ரேவியினை சிறிது எடுத்து வறுத்து வைத்துள்ள மீன் துண்டுகள் மீது ஊற்றி கொள்ளவும்.

இப்பொழுது கடாயில் உள்ள க்ரேவியில், சாதம் வேகவைத்துள்ள கஞ்சி தண்ணீர் 1 கப் சேர்த்து கொதிக்கவிடவும்.

தம்போடும் பாத்திரதில் முதலில் க்ரேவியினை ஊற்றவும். அதன் மீது முக்கால் வாசி வேகவைத்துள்ள சாதத்தினை போட்டு பரவிடவும். கடைசியில் சாதத்தின் மீது க்ரேவி ஊற்றி உள்ள மீன் துண்டுகளை உடையாமல் பத்திரமாக எடுத்து வைக்கவும். தட்டில் மீதும் உள்ள க்ரேவியினையும் சாதத்தின் மீது ஊற்றிவிடவும்.

இதனை சுமார் 20 நிமிடங்கள் தம்மீல் வேகவிடவும். தம் போட்டு முடிந்தவுடன் பாத்திரத்தினை உடனே திறக்காமல், சுமார் 10 நிமிடங்கள் அப்படியே விடவும்.

மீன் துண்டுகளை திரும்பவும் சாதத்தின் மீது இருந்து வெளியில் எடுத்து சாதத்தினை கலந்துவிடவும். பரிமாறும் பொழுது மீன் துண்டுகள் சேர்த்து பரிமாறவும். இப்பொழுது சுவையான மீன் பிரியாணி ரெடி.

குறிப்புகள்:

சமைக்க தேவைப்படும் நேரம் : 40 – 45 நிமிடங்கள்

மீன்களை வேகவைக்கும் பொழுதும் சாதத்தினை வேகவைக்கும் பொழுது தனி தனியாக உப்பு சேர்த்து இருப்பதால், க்ரேவி செய்யும் பொழுது உப்பு அதிகமாக சேர்க்க வேண்டாம்.

மீன் பிரியாணி செய்ய எப்பொழுதும் முள் இல்லாத மீன் துண்டுகள் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.