பத்திய மிளகுக் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி

பச்சரிசி - 1/2 தேக்கரண்டி

வெந்தயம் - 1/4 தேக்கரண்டிக்கும் குறைவாக

மல்லி - 1/2 தேக்கரண்டி

புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

பூண்டு - 20 பற்கள்

சின்ன வெங்காயம் - 5

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

மிளகு, சீரகம், பச்சரிசி, துவரம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக வாணலியில் போட்டு நன்றாக வறுத்து எடுத்து வைக்கவும்.

பிறகு வாணலியில் மல்லியைப் போட்டு லேசாக வறுத்தெடுக்கவும். (லேசாக சூடுபடுத்தினால் போதும். அதிகம் வறுத்தால் கசந்துவிடும்).

புளியையும் சூடான வாணலியில் போட்டு எடுக்கவும்.

வறுத்தவற்றுடன் புளியையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.

அத்துடன் தோலுரித்த சின்ன வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பூண்டுப் பற்களைப் போட்டு நன்றாக வதக்கவும்.

அதனுடன் அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி, மிதமான தீயில் நன்றாகக் கிளறவும். தண்ணீர் வற்றி, எண்ணெய் நிறம் மாறி பிரிந்து வரும். பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் வைத்து நன்கு கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்கி, கடுகு தாளித்துச் சேர்த்து பரிமாறவும்.

குறிப்புகள்:

குழம்பில் எண்ணெய் மேலே மிதக்குமாறு இருப்பது தான் சரியான பதமாக இருக்கும்.