வெஜ் டோம் யாம் சூப்
தேவையான பொருட்கள்:
மெலிதான சதுரங்களாக நறுக்கிய கேரட் - 1/4 கப்
மெலிதாக நறுக்கிய பேபி கார்ன் - 1
சதுரங்களாக நறுக்கிய முட்டை கோஸ் - 1/2 கப்
தக்காளி - 1
சிறு சிறு பூக்களாக நறுக்கிய காலிஃப்ளவர் - 1/4 கப்
கடுகு கீரை - 2 தண்டுகள்
மிளகாய் வற்றல் - 5
சின்னவெங்காயம் - 5 அல்லது 6
பூண்டு - 3 அல்லது 4 பல்
புளி - சுண்டைக்காய் அளவு
பாம் சுகர் (palm sugar) அல்லது பிரவுன் சீனி - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
லெமன் கிராஸ் - 1
எலுமிச்சை இலைகள் - 3
மல்லிக்கீரையின் வேர்பகுதி - 3
இஞ்சி துண்டு - ஒரு இன்ச் அளவு
பச்சை மிளகாய் - 1
வெஜிடபிள் ஸ்டாக் கியூப் - 1/2
தேங்காய் பால் (விருப்பப்பட்டால்) - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் கால் தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகாய் வற்றல், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். ஆறியதும் அதனுடன் பாம் சுகர் அல்லது பிரவுன் சீனி, கால் தேக்கரண்டி உப்பு, புளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் அரைத்த கலவையை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் வதக்கி தனியே வைக்கவும்.
சூப் செய்யும் பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி, வெஜ் ஸ்டாக் கியூப், லெமன் கிராஸ்(வெளிப்புறத்தில் உள்ள இரு இதழ்களை உரித்து விட்டு தடிமனான அடிப்பகுதியை வெட்டி கத்தியின் கைப்பிடியால் லேசாக இடித்துக் கொள்ளவும்), மெலிதாக நறுக்கின எலுமிச்சை இலைகள், பச்சை மிளகாய்(நறுக்க வேண்டாம்), மெலிதாக நறுக்கின இஞ்சி, மல்லிக்கீரையின் வேர்ப்பகுதி சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் தீயைக் குறைத்து மேலும் 5 நிமிடம் கொதிக்க விடவும்.
மிளகாய் கலவையிலிருந்து முக்கால் தேக்கரண்டி சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும்.(மிளகாய் வற்றலின் காரத்தைப் பொறுத்து கூட்டவோ குறைக்கவோ செய்து கொள்ளவும்)
கேரட் மற்றும் பேபி கார்ன் சேர்த்து 2 நிமிடம் வேக விடவும்.
அதனுடன் காலிஃப்ளவர் மற்றும் நான்காக நறுக்கின தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வேக விடவும்.
முட்டைகோஸ் மற்றும் கடுகு கீரை சேர்த்து ஒரு நிமிடம் கொதித்ததும் இறக்கி விடவும். இந்த நேரத்தில் கால் கப் தேங்காய்ப்பால் சேர்த்து இறக்கி சூப் பவுலில் பரிமாறவும் (லெமன் கிராசை நீக்கிவிட்டு சூடாக பரிமாறவும்).
குறிப்புகள்:
இங்கே இரண்டு பேருக்கான அளவு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரவர் விருப்பம் போல் காய்கறிகள் சேர்க்கலாம். வேகும் நேரத்தைப் பொறுத்து அவற்றை முதலிலேயோ அல்லது கடைசியோ சேர்ப்பது முக்கியம்.
காய் அதிகம் வெந்து விட்டால் சுவை குறையும். முக்கால் பாகம் வெந்தால் போதும். டயட் இருப்பவர்கள் இந்த சூப்போடு(தேங்காய்ப்பால் சேர்க்காமல்) ஒன்று அல்லது இரண்டு ஸ்லைஸ் ஹோல் மீல் ப்ரெட் சாப்பிட்டால் வயிறு நிறைவாக இருக்கும்.
கலோரியும் குறைவு. ஒரு பெரிய பவுலில் வேகவைத்த ரைஸ் நூடுல்ஸ் போட்டு அதன் மீது இந்த சூப்பை ஊற்றி சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.
நல்ல சிவப்பு நிற மிளகாய் வற்றல் பயன்படுத்தினால் சூப் நல்ல சிவந்த நிறத்தில் வரும்.