சிக்கன் சூப்
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 300 கிராம் (எலும்பு பகுதி)
ப்ரெட் - 2 துண்டுகள்
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 4 பல்
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
பட்டர் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வறுக்க:
மல்லி விதை - ஒரு மேசைக்கரண்டி
வரமிளகாய் - 1 அல்லது 2
மிளகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
சிக்கனை சுத்தம் செய்து எலும்பிலுள்ள கறியை இயன்ற வரை தனியாக எடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். எலும்பை அம்மி அல்லது உரலில் வைத்து தட்டி எடுத்து வைக்கவும். வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, இஞ்சி மற்றும் பூண்டை நறுக்கிக் கொள்ளவும். ப்ரெட்டை சிறிய துண்டுகளாக்கி வைக்கவும்.
வறுக்க கொடுத்துள்ளவற்றை வெறும் கடாயில் வாசம் வரும் வரை வறுத்தெடுத்து ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் எலும்புடன் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, அரைத்த விழுது, கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், உப்பு மற்றும் 4 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
வெந்ததும் சூப்பைத் தனியாக வடிகட்டி வைக்கவும்.
கடாயில் பட்டர் போட்டு உருகியதும், ப்ரெட் துண்டுகளைச் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டுகளைப் போட்டு, சிறிதளவு உப்பு (சிக்கன் வதங்க), மீதமுள்ள மஞ்சள் தூள் மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி லேசாக தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.
சிக்கன் வெந்ததும் வடிகட்டி வைத்துள்ள சூப்பைச் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
பரிமாறும் போது வறுத்த ப்ரெட் துண்டுகளைச் சேர்க்கவும்.
குறிப்புகள்:
மிளகு மற்றும் வரமிளகாயை அவரவர் விருப்பத்திற்கேற்ப சேர்த்துக் கொள்ளலாம்.
முதலிலேயே ப்ரெட் துண்டுகளைச் சேர்த்தால் சூப்பில் ப்ரெட் ஊறி நன்றாக இருக்காது. அதனால் தான் பரிமாறும் போது சேர்க்கச் சொல்லி இருக்கிறேன்.