ரவா கார அடை
தேவையான பொருட்கள்:
ரவா - 3 கப்
கடலைமாவு - 1 1/4 கப்
பெரிய வெங்காயம் - 6
மிளகாய் வற்றல் - 9
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 3 கொத்து
கொத்தமல்லி - 2 கப்
கல் உப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
ரவா மற்றும் கடலை மாவை மேலே கொடுத்துள்ள அளவில் சலித்து எடுத்துக் கொள்ளவும்.
ரவாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி, 3 கப் தண்ணீர் ஊற்றி சுமார் ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
மிளகாய், சோம்பு இரண்டையும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும்.
ஊற வைத்த ரவாவுடன் கடலைமாவு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
மாவு கரைந்தவுடன் அரைத்து வைத்துள்ள விழுது, மஞ்சள் தூள் சேர்த்து கரைக்கவும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் தடவி ஒரு குழிகரண்டி மாவு எடுத்து அடையாக ஊற்றி அதன் மேல் எண்ணெய் ஊற்றவும்.
2 நிமிடம் கழித்து ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபுறத்தையும் வேக வைத்து எடுக்கவும்.
ருசியான ரவா கார அடை தயார். இதை சூடாக சாப்பிட்டால்தான் மிகவும் ருசியாக இருக்கும். தேங்காய் சட்னியுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் இன்னும் சுவை அதிகரிக்கும்.
குறிப்புகள்:
இந்தக் குறிப்பினை வழங்கி செய்து காட்டியவர் திருமதி. புவனேஸ்வரி அவர்கள். இதை செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது. ரவா ஊற வைத்தல் மட்டும்தான் அதிக நேரம் (ஒரு மணி நேரம்) எடுக்கும். மற்றவை 10 நிமிடங்களில் முடிந்து விடும்.