மினி பூரி மசாலா
தேவையான பொருட்கள்:
பூரி செய்ய:
மைதா – 1/2 கிலோ
நெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மசாலா செய்ய:
கடுகு, உளுந்து – 1 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு - 4
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 5 பல்
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மைதா, நெய், உப்பு மூன்றையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு பிசைந்துக் கொள்ளவும்.
பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி 15 நிமிடம் மூடி வைக்கவும்.
15 நிமிடம் கழித்து அந்த உருண்டைகளை சப்பாத்தி கல்லில் சின்ன சின்ன வட்டங்களாக திரட்டிக் கொள்ளவும்.
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி திரட்டிய மாவை அந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். இப்பொழுது மினி பூரி ரெடி.
அடுத்து குக்கரில் உருளைக்கிழங்கை போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீரை ஊற்றி இரண்டு விசில் வரும் வரை வேக விடவும்.
நன்கு வெந்தபின் அந்த உருளையை ஆற வைத்து அந்த உருளைக்கிழங்கில் மஞ்சள் தூள் சேர்த்து அதை நன்கு பிசைந்துக் கொள்ளவும்.
மசாலாவிற்கு தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டையும் சிறியதாக நறுக்கிக் கொள்ளவும். பின் பச்சைமிளகாயை சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு போட்டு நன்கு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் உருளைக்கிழங்கை போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
மசாலா பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். இப்பொழுது மசாலா ரெடி.
மினி பூரியின் நடுப்பகுதியை ஒரு ஓட்டை போட்டு அதனுள் இந்த மசாலா வைத்து பரிமாறவும்.