மசாலா கைமா இட்லி
தேவையான பொருட்கள்:
இட்லி - 8
மைதா மாவு - 2 கப்
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
ரொட்டித்தூள் - 2 கப்
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
சின்ன வெங்காயம் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 கப் (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 6 பல்
இஞ்சி - 1 சிறுதுண்டு
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இஞ்சியையும் பூண்டையும் சேர்த்து மிருதுவாக அரைக்கவும். மைதாவில் ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூள், தேவையான உப்பு கலந்து, போதுமான நீரை ஊற்றி தோசை மாவைப் போல் கரைத்துக் கொள்ளவும்.
இட்லிகளை விரல் நீளத்திற்கு துண்டுகள் செய்து மைதாக் கரைசலில் அமிழ்த்தி ரொட்டித் தூளில் பிரட்டி சூடான எண்ணெய்யில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு போட்டு வெடித்ததும், உளுத்தம் பருப்பைப் போடவும்.
பருப்பு சிவந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம், மஞ்சள்தூள், தக்காளியை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.
அனைத்தும் நன்கு வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுதினைச் சேர்த்து சில நிமிடங்களுக்கு வதக்கவும்.
இப்போது பொரித்து வைத்துள்ள இட்லி துண்டுகளையும், கொத்தமல்லியையும் சேர்த்து நன்கு கலந்து எல்லாம் ஒன்றாய் சேரும் வரை குறைந்த தீயில் சில நிமிடங்கள் பிரட்டி எடுக்கவும்.