பொங்கல் மற்றும் கொத்சு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் - 3

பாசி பருப்பு - 1/2 கப்

வெங்காயம் - 1

தக்காளி - 1

பூண்டு - 3 பல்

பச்சை மிளகாய் - 2

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி

தனியா தூள் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - கொஞ்சம்

கறிவேப்பிலை - கொஞ்சம்

எண்ணெய் - சிறிதளவு

வெண் பொங்கல் செய்ய:

பச்சரிசி - 2/3 ஆழாக்கு

பாசிப்பருப்பு - 1/3 ஆழாக்கு

உப்பு - தேவையான அளவு

பொங்கல் தாளிக்க:

எண்ணெய் மற்றும் நெய் - தேவைக்கு

மிளகு - 1/4 தேக்கரண்டி

சீரகம் - 1/4 தேக்கரண்டி

இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

பாசிப்பருப்பு- கத்தரிக்காய் கொத்சு செய்ய:

பாசிப்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், தட்டி வைத்த பூண்டு, மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

தக்காளி குழைந்ததும் சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.

காய் வதங்கியதும் மிளகாய் தூள் மற்றும் தனியா தூள் சேர்த்து கிளறி விடவும்.

தேவையான உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

காய் வெந்ததும் வேக வைத்துள்ள பாசிப்பருப்பு சேர்த்து ஒரு கொதி விடவும்.

கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

வெண்பொங்கல் செய்ய:

பாசி பருப்பை வெறும் கடாயில் வாசம் வரும் வரை வறுத்து, அரிசியுடன் களைந்து 2 1/2 முதல் 3 அழாக்கு தண்ணீர் விட்டு, தேவையான உப்பு சேர்த்து குக்கரில் 4 விசில் வேக விட்டு எடுக்கவும்.

பிரஷர் அடங்கியதும் கரண்டியால் நன்கு கிளறி, குழைத்து கொள்ளவும்.

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் மற்றும் நெய் விட்டு காய்ந்ததும் மிளகு மற்றும் சீரகம் சேர்த்து பொரிய விடவும். அடுப்பை அணைத்து விட்டு கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.

இதனை வெண்பொங்கலுடன் சேர்த்து கலந்து விடவும்.

குறிப்புகள்:

விரும்பினால் பொங்கலுக்கு முந்திரியும் சேர்த்து தாளிக்கலாம்.

வெறும் மிளகு, சீரகம் தாளித்து, அதனுடன் மிளகு - சீரக பொடி சேர்த்தும் வெண்பொங்கல் செய்யலாம்.

இதற்கு கொத்தமல்லி, பச்சைமிளகாய், இஞ்சி எல்லாம் சேர்க்க வேண்டாம்.

பச்சரிசிக்கு பதில் பாஸ்மதி அரிசி சேர்த்தும் செய்யலாம். பாஸ்மதி அரிசி சேர்ப்பதானால் அரிசியும், பருப்பும் சேர்த்து களைந்து அரை மணி நேரம் ஊறவிட்டு, இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.