சாதம் அடை
தேவையான பொருட்கள்:
சாதம் - 1 கப்
அரிசி மாவு - 1/4 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
மிளகு - 5
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி - 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மிளகு, சீரகம் இரண்டையும் தனித்தனியாக மிக்ஸியில் போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ளவும். கொத்தமல்லி, கறிவேப்பிலை இரண்டையும் கழுவி எடுத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சாதத்தை போட்டு அதனுடன் உப்பு சேர்த்து நன்கு பிசையவும். அதன் பிறகு அதில் அரிசி மாவு மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து நன்கு ஒன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் சாதத்துடன் பொடி செய்து வைத்திருக்கும் சீரகத் தூள் மற்றும் மிளகு தூள் போட்டு எல்லாவற்றையும் ஒன்றாகும்படி கலந்துக் கொள்ளவும். பிறகு அதில் கொத்தமல்லி, கறிவேப்பிலை இரண்டையும் பொடியாக நறுக்கி போட்டு பிசைந்து ஒரு மேசைக்கரண்டி தண்ணீர் தெளித்து பிசைந்துக் கொள்ளவும்.
பிசைந்த மாவை ஒரு பெரிய எலுமிச்சை அளவு உருண்டையாக உருட்டி எடுத்துக் கொள்ளவும்.
வாழை இலையை எடுத்து அதை கழுவி விட்டு அதன் நடுவில் உருண்டையை வைத்து அடைப் போல சற்று தடிமனாக வட்டமாக தட்டிக் கொள்ளவும்.
அதன் பிறகு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அரை தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி தேய்த்து காய்ந்ததும் தட்டி வைத்த அடையை இலையிலிருத்து எடுத்து கல்லில் போட்டு மேலே அரைத் தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும்.
அடை 2 நிமிடம் கழித்து வெந்ததும் திருப்பி போட்டு தேவைப்பட்டால் மேலே எண்ணெய் ஊற்றி ஒரு நிமிடம் கழித்து வெந்ததும் எடுத்து விடவும். சற்று நிறம் மாறியதும் எடுக்கவும்.