கைமா கொத்துப் பரோட்டா
தேவையான பொருட்கள்:
மைதா - 2 கப்
முட்டை - 2
கைமா - 100 கிராம்
வெங்காயம் - 3
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 3
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
தேக்கரண்டி
மேகி சிக்கன் ஸ்டாக் - 1 க்யூப்
மல்லித்தழை நறுக்கியது - 1/2 கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேவையான பொருட்களை தயாராய் எடுத்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.
மைதாவுடன் சிறிது எண்ணெய் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பின்னர் அதன் மேல் எண்ணெய் தடவி சுமார் அரை மணி நேரம் ஊற விடவும். இந்த மைதா மாவுக்கு முட்டை, பால், சமையல் சோடா தேவை இல்லை. பரோட்டா அதிகம் மிருதுவாக இருக்க வேண்டுமென்பதில்லை.
மாவினை சிறிய உருண்டைகளாக உருட்டி, வட்டமாக தேய்த்தெடுத்து, பரோட்டாக்கள் செய்து சுட்டு எடுக்கவும். இந்த பரோட்டக்களை நான்காக வெட்டி இளம் சூடாக இருக்கும் போதே மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் பூப்பூவாக உதிர்ந்து விடும். இப்படி கொத்திய பரோட்டாக்களை முதல் நாளே தயார் செய்து ஃப்ரிட்ஜில் ஸ்டோர் பண்ணிக்கொள்ளலாம்.
அகலமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய், மல்லி அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கி, பாத்திரத்தை மூடி வைக்கவும். கைமாவை தனியே வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
5 நிமிடங்கள் சென்றபின்பு வெந்த கைமாவைச் சேர்த்து அத்துடன் மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
சிக்கன் ஸ்டாக், கரம் மசாலா சேர்க்கவும். சிக்கன் ஸ்டாக் கரையும் வரை வதக்கவும்.
மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு முட்டையை உடைத்துக் கிளறவும். ஏற்கனவே வதக்கிய கலவையில் கிளறிய முட்டையை சேர்க்கவும். அத்துடன் உதிர்த்த பரோட்டாவைச் சேர்த்து பிரட்டிவிட்டு 5 நிமிடம் ஸிம்மில் வைக்கவும்.
ஐந்து நிமிடம் கழித்து இறக்கி, நறுக்கிய மல்லித்தழையினை தூவி பரிமாறவும்.
குறிப்புகள்:
சிக்கன் ஸ்டாக் சேர்ப்பதால் உப்பு குறைவாக சேர்த்தாலே போதுமானது.