உப்புமா கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 1/2 கிலோ
கடலை பருப்பு - 100 கிராம்
துவரம் பருப்பு - 100 கிராம்
உளுத்தம் பருப்பு - 50 கிராம் + 1 மேசைக்கரண்டி
பயத்தம் பருப்பு - 50 கிராம்
மிளகாய் வற்றல் - 20
பெரிய வெங்காயம் - 2
தேங்காய் துருவல் - 1 கப்
கடுகு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 3 குண்டு மணி அளவு
எண்ணெய் - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
அதைப் போலவே பருப்பு வகைகள் எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
கிரைண்டரில் ஊற வைத்த அரிசி, பருப்பு வகைகள், உப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயத்துண்டுகள் போட்டு தண்ணீர் சேர்த்து சற்று கெட்டியாக இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்துக் கொள்ளவும். அதில் நறுக்கின வெங்காயம், கறிவேப்பிலை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
அதில் அரைத்து வைத்திருக்கும் மாவை ஊற்றி அதனுடன் தேங்காய் துருவலை போட்டு நன்கு கிளறி விடவும்.
தேவைப்பட்டால் அதில் எண்ணெய் சேர்த்து கிளறவும். 2 நிமிடம் கிளறிய பிறகு இறக்கி வைத்து விடவும்.
இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும். இட்லி தட்டில் துணியை போட்டு அதில் இந்த கலவையை எடுத்து, கையில் ஒட்டாமல் இருக்க எண்ணெய் தொட்டுக் கொண்டு சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். இட்லி தட்டை இட்லி பானையில் வைத்து அதன் மேல் வேர்வை தண்ணி விழாமல் இருக்க மேலே ஒரு துணியை போட்டு மூடி வைத்து 15 நிமிடம் வேக வைக்கவும். வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.