மிக்ஸ்டு வெஜிடபுள் சட்னி
தேவையான பொருட்கள்:
கேரட் - 3
கோவக்காய் - 10
கத்தரிக்காய் - 3
தக்காளி - 3
எள் - 3 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 8
தேங்காய் துண்டுகள் - சிறிது
புளி - சிறு எலுமிச்சைபழ அளவு
சீரகம் - 2 தேக்கரண்டி
பூண்டு - 8 பல்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கடலைபருப்பு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காய தூள் - சிறிது
செய்முறை:
காய்கறிகளை கழுவி சின்ன சின்னதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். எள்ளை வெறும் வாணலியில் வறுத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் பச்சை மிளகாயை வதக்கி வைத்து கொள்ளவும்.
அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி தக்காளியை தவிர மற்ற காய்கறிகளை வதக்கவும்.
காய்கறிகள் பாதி வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும். சிம்மில் வைத்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
அனைத்தும் நன்கு வதங்கியதும் அடுப்பை அணைத்து விடவும். நன்கு ஆற விடவும்.
மிக்ஸியில் முதலில் பச்சை மிளகாய், எள், பூண்டு, தேங்காய் துண்டுகள், புளி, உப்பு, சீரகம் இவை அனைத்தையும் நன்கு மைய அரைத்துக் கொள்ளவும். (தேவையானால் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளவும்.)
அரைத்த விழுதுடன் வதக்கி வைத்திருக்கும் காய்கறிகளையும் சேர்த்து அரைத்து கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து அதில் அரைத்து வைத்திருக்கும் சட்னியை போட்டு கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
சுவையான சட்னி ரெடி.
குறிப்புகள்:
இந்த சட்னி கோஸ், பீர்க்கங்காய், சுரைக்காய், புடலங்காய், முள்ளங்கி மேலும் அனைத்து காய்கறிகளிலும் செய்யலாம்.
இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற டிபன் வகைகளுக்கும் நன்றாக இருக்கும்.