கிடாரங்காய் ஊறுகாய்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கிடாரங்காய் - 2

பூண்டு - 20 பல்

வெந்தயம் - அரை மேசைக்கரண்டி

இஞ்சி - ஒரு அங்குல துண்டு

கடுகு - அரை மேசைக்கரண்டி

வினிகர் - ஒன்றரை மேசைக்கரண்டி

மிளகாய் வற்றல் - 20

எண்ணெய் - 100 கிராம்

கலர் பவுடர் - கால் தேக்கரண்டி

கறிவேப்பிலை - 2 கொத்து

பெருங்காய தூள் - ஒரு தேக்கரண்டி

உப்பு - அரை மேசைக்கரண்டி

செய்முறை:

கிடாரங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் உப்பு சேர்த்து வெயிலில் 3 நாட்கள் காய வைத்து எடுத்துக் கொள்ளவும். இதனைக் கைபடாமல் செய்யவேண்டும். இல்லையெனில் பூசணம் பிடித்துவிடும்.

மிளகாய் வற்றலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு, இஞ்சி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் மிளகாய் வற்றலை போட்டு வறுத்து எடுத்து கொண்டு பிறகு வெந்தயத்தை போட்டு ஒரு நிமிடம் பொன்னிறமாக வறுக்கவும். வறுத்தவற்றை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.

காய வைத்த கிடாரங்காயுடன் பூண்டு, இஞ்சி இரண்டையும் சேர்க்கவும். வினிகருடன் கலர் பவுடர் சேர்த்து கரைத்து, கிடாரங்காயில் ஊற்றவும்.

எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து கிளறி விடவும். அரைத்த மிளகாய் பொடியையும் கிடாரங்காயில் போட்டு நன்கு கிளறி விடவும்.

பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து தாளிக்கவும்.

அதை அப்படியே எண்ணெய்யுடன் கிடாரங்காய் கலவையில் ஊற்றவும்.

பின்னர் நன்கு கிளறிவிட்டு, எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு தண்ணீர்படாமல், கைப்படாமல் வைத்துக் கொள்ளவும்.

சுவையான கிடாரங்காய் ஊறுகாய் தயார். ஊறுகாயை எடுப்பதற்கு கண்ணாடி அல்லது பீங்கான் கரண்டிகளை பயன்படுத்தவும். ஈரம் படாமல் இருந்தால் மாதக்கணக்கில் பாதுகாக்கலாம்.

குறிப்புகள்: