மட்டன் குழம்பு
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ
தேங்காய் துருவல் - 1/4 கப்
கசகசா - 1/2 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் - 25
கலந்த மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
சோம்பு தூள் - 1 தேக்கரண்டி
மல்லித் தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
பட்டை - அரை அங்குலத் துண்டு
நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கல் உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மட்டனைத் துண்டுகளாக்கி சுத்தம் செய்து கறியில் உள்ள கொழுப்புடன் எடுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காய் துருவலுடன் கசகசா சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் சுத்தம் செய்து வைத்திருக்கும் கறியை கொழுப்புடன் சேர்த்துப் போட்டு நன்கு கிளறவும். பிறகு உப்பு சேர்த்து பிரட்டவும். (உப்பு சேர்த்து பிரட்டுவதால் கறியில் நன்கு உப்பு சேர்ந்துவிடும்).
கறி சற்று நிறம் மாறியதும் மல்லித் தூள், சோம்பு தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும்.
மிதமான தீயில் வைத்து கறியுடன் தூள் வகைகள் ஒன்றாக சேரும்படி நன்கு 2 நிமிடங்கள் பிரட்டவும்.
மிளகாய் தூள் வாசம் போனவுடன், தேங்காய், கசகசா விழுதைச் சேர்க்கவும்.
கறியுடன் மசாலா மற்றும் தேங்காய் விழுது ஒன்றாக சேரும்படி கிளறிவிட்டு, ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி தீயை அதிகமாக வைத்து, ஒரு முறை கிளறிவிட்டு குக்கரை மூடி வேக வைக்கவும். குக்கரிலிருந்து ப்ரசர் வந்ததும் வெயிட் போட்டு 4 விசில் வரும் வரை வைத்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
சிறிது நேரம் கழித்து குக்கரைத் திறந்து பார்த்தால் கறியில் உள்ள கொழுப்பு மற்றும் எண்ணெய் மேலே மிதந்து வந்திருக்கும். கமகமக்கும் மட்டன் குழம்பு தயார்.
குறிப்புகள்:
இந்த குழம்பை பரோட்டா மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்.
இந்த குழம்பில் நல்லெண்ணெய் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து செய்வதால் மிகவும் ருசியாக இருக்கும்.