தேங்காய்பால் கருவாட்டுக் குழம்பு
தேவையான பொருட்கள்:
தேங்காய்பால் - 2 கப்
புளிக்கரைசல் - 1/4 கப்
வஞ்சிரம் கருவாடு - 50 கிராம்
கத்திரிக்காய் - 2
உருளை அல்லது வாழைக்காய் - 1
மாங்காய் - 1
முருங்கைக்காய் - 1
வெங்காயம் - 2
தக்காளி - 3
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
காய்ந்த மொச்சை - 1/2 கப்
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
தனியா பவுடர் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உருளை அல்லது வாழைக்காய், தோல் சீவிய மாங்காய், முருங்கைக்காய், கத்திரிக்காய் ஆகியவற்றை 1 1/2 இஞ்ச் நீளத்திற்கு நறுக்கிக் கொள்ளவும். தக்காளி வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை நீளமாக கீறிக் கொள்ளவும். கருவாட்டை சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
எண்ணெய் பிரிந்ததும் அதனுடன் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கிளறி சுத்தம் செய்த கருவாட்டுத் துண்டுகளை போட்டு கிளறவும்.
அதன் பிறகு நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகள் மற்றும் தனியாத் தூள் சேர்த்து கிளறி விடவும்.
இந்த கலவையுடன் புளிக்கரைசலை ஊற்றி எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாகும்படி கலக்கி விட்டி கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்ததும் தேங்காய்பால் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
வெறும் வாணலியில் மொச்சையை போட்டு வறுத்து அரை மணி நேரம் ஊற வைத்து குக்கரில் வேக வைத்து வடிகட்டி அதை குழம்பில் சேர்த்து கிளறி விடவும். மேலும் சிறிது நேரம் சிம்மில் வைத்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
கருவாட்டில் உப்பு சேர்ந்திருப்பதால் குறைந்த அளவான உப்பே போதுமானது.
இது ப்ளைன் சாதம், சப்பாத்தி, கோதுமை தோசை, இடியாப்பம் போன்றவற்றிற்கு ஏற்றது.