கோழி குழம்பு (2)
தேவையான பொருட்கள்:
கோழி - 1/2 கிலோ
உருளைக்கிழங்கு - 2
தக்காளி - 2
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
தேங்காய் துருவல் - 1/4 கப்
கொத்தமல்லி - 2 கொத்து
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தனி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
ஏலக்காய் - 2
பட்டை - 1
கிராம்பு - 3
எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி + 1/2 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் கோழியை நறுக்கி சுத்தம் செய்து துண்டுகளாக எடுத்துக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும். கொத்தமல்லித் தழையை ஆய்ந்து தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு விழுது மற்றும் மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை தண்ணீரில் கழுவி தோலை சீவி விட்டு நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை தோல் உரித்து மெல்லிதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்து வைத்திருக்கும் கறியுடன் கறி மசாலா தூள், ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு பிரட்டி 5 நிமிடம் ஊற வைக்கவும்.
வாணலியில் அல்லது அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் போட்டு 45 நொடி வதக்கவும். பிறகு பட்டை, கிராம்பு, ஏலக்காய் போடவும்.
வெங்காயம் லேசாக வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது போட்டு 45 நொடி வதக்கவும்.
அதன் பின்னர் நறுக்கின தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
ஒரு நிமிடம் கழித்து அதனுடன் மசாலா தூள் போட்டு ஊற வைத்திருக்கும் கறியை போட்டு 1 1/2 நிமிடம் பிரட்டி விடவும்.
பிரட்டிய பிறகு அதில் நறுக்கின உருளைக்கிழங்கு, மல்லித்தூள், அரை தேக்கரண்டி உப்பு போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கிளறி விடவும்.
பிறகு பாத்திரத்தை தட்டை வைத்து மூடி விடவும். மூடிய பிறகு 8 நிமிடம் அதிக தீயில் வைத்து கொதிக்க விடவும்.
குழம்பு கொதிக்கும் சமயத்தில் தேங்காய் துருவலை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும். பிறகு மூடியை திறந்து குழம்பு கொதித்ததும் தேங்காய் விழுதை சேர்க்கவும்.
தேங்காய் விழுது சேர்த்த பிறகு மிதமான தீயில் 6 நிமிடம் வைத்து விடவும். இடையில் மூடியை திறந்து கிளறி விடவும்.
6 நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கி விடவும். மேலே கொத்தமல்லித் தழை தூவி சூடாக பரிமாறவும்.
குறிப்புகள்:
இதை சப்பாத்தி, பரோட்டா மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.