கோழிக் குழம்பு
தேவையான பொருட்கள்:
கோழி - 3/4 கிலோ
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய் தூள் - 2 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வறுத்துப் பொடிக்க:
சோம்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 3/4 தேக்கரண்டி
ஏலக்காய் - 3
கிராம்பு - 4
பட்டை - ஒரு அங்குலத் துண்டு
தாளிக்க:
சோம்பு, சீரகம் - தலா அரை தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
கோழியைச் சுத்தம் செய்து மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி வைக்கவும். வறுக்க வேண்டியவற்றை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து பொடித்துக் கொள்ளவும்.
சிறு தீயில் மிளகாய் தூளை வாசம் வரும் வரை வறுக்கவும். (மிளகாய் தூள் கருகிவிடாமல் பார்த்துக் கொள்ளவும். கருகினால் குழம்பு கசந்துவிடும். தூளை வறுத்து சேர்ப்பதால் குழம்பு நல்ல நிறமாகவும், மணமாகவும் இருக்கும்).
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளிக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்,
வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து குழைய வதக்கி, கோழி மற்றும் உப்பு சேர்த்து, மூடி வைத்து பத்து நிமிடங்கள் வதங்கவிடவும்.
கோழி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள் சேர்த்து வேகவிடவும். தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்க்கவும். (நான் தண்ணீர் சேர்க்கவில்லை).
குழம்பு வெந்து எண்ணெய் பிரிந்து வந்ததும், பொடித்த பொடியைத் தூவி இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
சாதம், இட்லி, தோசைக்கு மிகவும் நன்றாக இருக்கும்.