உப்புக்கண்ட குழம்பு (1)
தேவையான பொருட்கள்:
உப்பு கண்டம் (காய்ந்த ஆட்டுக்கறி) - 3/4 கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் - 100 கிராம் + 12 (தாளிக்க)
துவரம் பருப்பு - 100 கிராம்
தேங்காய் - ஒரு மூடி
சோம்பு - 1/2 மேசைக்கரண்டி
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 3
கலந்த மிளகாய் தூள் - 1/4 கப் + 1 மேசைக்கரண்டி
உருளைக்கிழங்கு - 3
சிறிய கத்தரிக்காய் - 4
கறிவேப்பிலை - 2 கொத்து
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
தாளிக்க வேண்டிய சின்ன வெங்காயத்தை மட்டும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் நீக்கி நான்கு துண்டுகளாக நறுக்கவும். கத்தரிக்காயும் நான்கு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
தேங்காய் துருவல், சோம்பு, பட்டை, கிராம்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக் எடுத்து கொள்ளவும். பிறகு 100 கிராம் வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுதினை தனியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
குக்கரில் உப்பு கண்டம், துவரம் பருப்பு, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, அரைத்த வெங்காயம் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் வேக விடவும்.
நன்கு கொதி வந்ததும் குக்கரை மூடி வெயிட் போட்டு 6 விசில் வரும் வரை வேக விடவும்.
பிறகு அடுப்பை நிறுத்தி விட்டு ஆவி அடங்கியதும் திறந்து 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்கு, கத்தரிக்காய் துண்டுகளை போட்டு கிளறி விட்டு மீண்டும் வேகவிடவும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி மிளகாய் தூளை போட்டு கலந்துக் கொண்டு அதை கறி கலவையுடன் ஊற்றி ஒரு தட்டை வைத்து மூடி இரண்டு நிமிடம் வேகவிடவும்.
பிறகு அதை திறந்து 2 மேசைக்கரண்டி உப்பு போட்டு கொதிக்க விடவும். அரைத்த தேங்காய் விழுதுடன் அரை கப் தண்ணீர் ஊற்றி கலந்து அதை குழம்பில் ஊற்றி கொதிக்க விடவும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வதங்கியதும் தாளித்த பொருட்களை கொதிக்கும் குழம்பில் கொட்டி 5 நிமிடம் கொதித்ததும் இறக்கி பரிமாறவும்.