கோழி ரசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

எலும்புடன் சேர்ந்த கோழி இறைச்சி - 350 கிராம்

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 1

கறிவேப்பிலை - சிறிதளவு

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

வதக்கி அரைக்க:

எண்ணெய் - 1 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் - ஒன்றரை கைப்பிடி அளவு

தக்காளி - 1

இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு

வரமிளகாய் - 3

மல்லித் தூள் - 2 தேக்கரண்டி

ரசப்பொடி - 1 தேக்கரண்டி

இடிக்க:

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் - 5

பூண்டு - 4 பல்

தாளிக்க:

எண்ணெய் - 1 தேக்கரண்டி

சீரகம், சோம்பு - தலா 1/2 தேக்கரண்டி

செய்முறை:

கோழியைச் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, வதக்கி அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களில் உள்ள வரமிளகாயைப் போட்டு வறுக்கவும்.

மிளகாய் வறுபட்டதும் சின்ன வெங்காயம், நறுக்கிய தக்காளி மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கி எடுத்து ஆறவிடவும்.

நன்கு ஆறியதும் அதனுடன் மல்லித் தூள் மற்றும் ரசப்பொடி சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

வெறும் கடாயில் இடிக்கக் கொடுத்துள்ள மிளகு மற்றும் சீரகத்தை வறுத்து, ஆறவிட்டு பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து இடித்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம் தாளித்து, நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

அதனுடன் கோழி, நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

வதக்கியவற்றை ப்ரஷர் குக்கருக்கு மாற்றி, அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து, நான்கு கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரும் வரை வேகவிடவும்.

ப்ரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து ரசத்தை கொதிக்கவிடவும். கொதித்ததும் இடித்து வைத்துள்ள மிளகு, சீரகக் கலவையைத் தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும், சூப் போல பருகவும் அருமையாக இருக்கும்.