கருப்பட்டி பணியாரம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புழுங்கலரிசி - 1 கப்

பச்சரிசி - 1 கப்

உளுத்தம் பருப்பு - 1/4 கப்

வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

கருப்பட்டி (தூள் பண்ணியது) - 2 கப்

வேர்க்கடலை (வறுத்து உடைத்தது) - 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசிகள், பருப்பு, வெந்தயம் முதலியவற்றை ஒன்றாய் கலந்து, நன்றாகக் களைந்து 5-6 மணி நேரம் ஊற வைத்து விட்டு, உப்பு ஒரு சிட்டிகை மட்டும் போட்டு, மிக நைஸாக அரைக்கவும். சற்றே கெட்டியாக இருப்பது நல்லது.

இந்த மாவினை சுமார் எட்டு மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.

பிறகு 2 கப் தூள் பண்ணிய கருப்பட்டியை மிகச் சிறிய அளவு தண்ணீர் விட்டு அடுப்பைச் சிறியதாக எரிய விட்டுக் காய்ச்சவும்.

இதனை விடாது கிளறிக் கொண்டிருந்தால் தான் அடியில் பிடிக்காது.

கருப்பட்டி நன்றாகக் கரைந்ததும் அதனை வடிகட்டவும்.

பிறகு அதை ஆற வைத்து, சிறிது சிறிதாக மாவில் கொட்டிக் கலக்கவும்.

பணியாரம் ஊற்றும் பதத்திற்கு மாவு வர வேண்டும்.

பணியாரத்தில் கருப்பட்டி வாசனை தெரியவேண்டும் என்பதால் ஏலப்பொடி போடுவது தேவையில்லை.

இத்துடன் வறுத்து, உடைத்த வேர்க்கடலை கலந்தால் ருசியாக இருக்கும்.

பணியாரச் சட்டியில் குழிகளில் ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு சிறிய குழிக் கரண்டியால் அரைக் கரண்டி மாவு ஊற்றவும்.

மேலேயும் அரை ஸ்பூன் வீதம் எண்ணை விடவும். சரியான அளவு தட்டால் மூடி வைப்பது உசிதம்.

அடுப்பை மிக நிதானமாக எரிய விடவும். இல்லாவிட்டால் கருப்பட்டி கலந்திருப்பதால் சீக்கிரம் கறுத்து விடும்.

உள்ளே நன்றாக வேக வேண்டும். தட்டைத் திறந்து பார்த்து, மேலே வெந்திருந்தால், மெள்ளத் திருப்பிப் போடவும்.

இந்தப் பக்கம் அதிக நேரம் வைக்க வேண்டாம். சட்டென்று எடுத்து விடலாம்.

குறிப்புகள்:

காரமான சட்னியுடன் பரிமாறவும்.