வெஜ் ரொட்டி ரோல்

on on on on off 9 - Great!
4 நட்சத்திரங்கள் - 9 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பொடியாக நறுக்கிய காய்கறி கலவை - ஒரு பெரிய கப்

சப்பாத்தி - 4

முட்டை - 4

மிளகு - சிறிது

வெங்காயம் - 1

இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

சாம்பார் தூள் அல்லது மிளகாய், தனியா தூள் - 1 மேசைக்கரண்டி

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 2

கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி அளவு

வேக வைத்த பட்டாணி - 1/2 கப்

எண்ணெய் - சிறிது

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் காய்கறி கலவையைச் சேர்த்து வதக்கவும்.

மிக்ஸியில் பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை அரைத்து, காய்கறிக் கலவையில் சேர்த்து நன்றாக வதக்கவும்.

பச்சை வாசனை போக வதங்கியதும், தூள் வகைகளைச் சேர்த்து பிரட்டி, தேவையான அளவு தண்ணீர் விட்டு மசாலா வாசனை போக கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்து கெட்டியாக வரும் போது வேக வைத்த பட்டாணி மற்றும் நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்த்து பிரட்டி இறக்கவும்.

முட்டையை உடைத்து ஊற்றி உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

தோசை கல்லைச் சூடாக்கி சிறிது முட்டை கலவையை ஊற்றி பரப்பிவிடவும்.

அதன் மேல் ஒரு சப்பாத்தியைப் போட்டு லேசாக கரண்டியால் அழுத்திவிடவும். (சப்பாத்தி முட்டையோடு ஒட்டிக்கொள்ளும்).

முட்டை வெந்ததும் எடுத்து ஃபாயில் ஷீட்டில் வைத்து, அதன் நடுவில் தயார் செய்த மசாலாவை வைத்து சுருட்டி மூடிவிடவும்.

குறிப்புகள்:

சப்பாத்தியை சுருட்டும் போது உடையாமல் இருப்பதற்காக முக்கால் பங்கு மல்டிக்ரெய்ன் ஆட்டாவும், கால் பங்கு மைதாவும் பயன்படுத்தி சப்பாத்தியை தயார் செய்துள்ளேன். வெறும் கோதுமை மாவு என்றால் மைதா மாவு சேர்க்கத் தேவையில்லை.

காய்கறிகளை பெரிய துண்டுகளாகச் சேர்க்க விரும்பினால், அவற்றைத் தனியாக தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். உள்ளே வைக்கும் மசாலா உங்கள் விருப்பமே. இதே போல எலும்பில்லாத சிக்கன் (டிக்கா, ஃப்ரை, மசாலா என எது வேண்டுமானாலும்), பனீர் என அனைத்திலும் செய்யலாம்.

குழந்தைகளுக்கு கொடுக்க உள்ளே துருவிய சீஸ் கூட சேர்க்கலாம். அல்லது சீஸ் ஷீட் ஒன்றை முட்டையின் மேல் வைத்து, அதன் மேல் மசாலாவை வைத்துச் சுருட்டலாம். ஒன்று அல்லது இரண்டிற்கு மேல் சாப்பிட முடியாது, அவ்வளவு நிறைவாக இருக்கும்.