அப்பகோவ இலை சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அப்பகோவ இலை - 4 கைப்பிடி அளவு

சின்ன வெங்காயம் - 150 கிராம்

வரமிளகாய் - 4

கடலைப்பருப்பு - 2 மேசைக்கரண்டி

தனியா - 1 மேசைக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

மிளகு - 5

புளி - பெரிய நெல்லிக்காய் அளவு

தேங்காய் - ஒரு மூடி

கறிவேப்பிலை - 4 இணுக்கு

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அப்பகோவ இலையை நல்ல தண்ணீரில் 5 நிமிடங்கள் போட்டு எடுத்து, 2 முறை அலசிவிட்டு நீரை வடியவிடவும். 5 நிமிடங்கள் மட்டும் தண்ணீரில் போட்டு வைத்தால் போதும். அதிக நேரம் வைத்திருந்தால் இலைகள் அழுகியது போல ஆகிவிடும். (இப்படி போட்டு வைப்பதால் இலையின் மீதுள்ள மண் மற்றும் தூசிகள் தண்ணீரின் அடியில் தங்கிவிடும். அனைத்து வகையான கீரைகள், புதினா மற்றும் மல்லித் தழைக்கும் இது பொருந்தும்).

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு போட்டு லேசாக சிவந்தவுடன், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், வரமிளகாய், சீரகம், மிளகு, தனியா ஆகியவற்றை ஒவ்வொன்றாக வரிசை கிரமமாக போட்டு வதக்கி எடுத்து ஆறவிடவும்.

பிறகு அதே வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் அப்பகோவ இலையைப் போட்டு வதக்கி ஆற வைக்கவும். (வதங்கியதும் நான்கு கைப்பிடி அளவுள்ள இலைகள் பாதியாக குறைந்துவிடும்).

வதக்கி ஆறவைத்தவற்றுடன் தேங்காய் துருவல், புளி மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்.

சுவையான சட்னி ரெடி.

குறிப்புகள்:

சப்பாத்தி, இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.

புளிக்கு பதிலாக 2 பெரிய நெல்லிக்காய்களை பச்சையாக அரிந்து போட்டுக் கொள்ளலாம் மிகவும் சுவையாக இருக்கும்.

சளிக்கு மிகவும் நல்லது.