உப்பு சீடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முறுக்கு மாவு - 2 கப்

தேங்காய் துருவல் - 1/4 கப்

எள்ளு - 1/2 தேக்கரண்டி

பெருங்காயத் தூள் - 1/4 தேக்கரண்டி

சோடா உப்பு - ஒரு சிட்டிகை

டால்டா - 1/4 கப்

தண்ணீர் - 1 கப்

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முறுக்கு மாவு தயாரிக்க: ஒரு கிலோ பச்சரிசிக்கு கால் கிலோ வெள்ளை உளுத்தம்பருப்பு என்ற கணக்கில் எடுத்துக் கொள்ளவும். உளுத்தம் பருப்பை வாணலியில் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பச்சரிசியை கழுவி காயவைத்துக் கொள்ளவும். பச்சரிசியுடன் உளுத்தம் பருப்பு சேர்த்து மிஷினில் கொடுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

மாவினை ஒரு அகன்ற பாத்திரம் அல்லது தாம்பாளத்தில் கொட்டி, கட்டிகள் இல்லாமல் களைந்து விட்டுக் கொள்ளவும். அதில் முதலில் பெருங்காயத் தூள், உப்பு போட்டு கைகளால் கிளறவும். பிறகு அதனுடன் தேங்காய் துருவல், எள்ளு, சோடா உப்பு சேர்த்துக் கிளறவும்.

அதன் பின்னர் உருக்கிய டால்டா ஊற்றி பிசைந்துக் கொள்ளவும். டால்டா ஊற்றி பிசையும் போது கட்டிகள் விழாதவாறு பிசைய வேண்டும். டால்டா ஒரே இடத்தில் கெட்டியாக சேர்ந்து விடாமல் மாவு முழுவதும் பரவுமாறு பிசைய வேண்டும். டால்டா கெட்டியாக இருந்தால் சரியாக பிசைய வராது.

டால்டா ஊற்றி, முதலில் ஒரு கரண்டி கொண்டு மாவுடன் கலக்கவும். பின்னர் கைகளால் மிருதுவாக பிசையவும். இப்படி செய்தால் டால்டா கைகளில் ஒட்டிக்கொள்வதை தவிர்க்கலாம்.

பின்னர், தண்ணீரை கையில் ஊற்றி சிறிது சிறிதாக மாவில் தெளித்து விட்டு பிசையவும். கெட்டியாக இல்லாமல் கைக்கு மிருதுவாக பிசையவும்.

பிசைந்த மாவை இரண்டு விரல்களில் நுனியால் கிள்ள, விரல்களாலேயே சிறு சிறு உருண்டையாக உருட்டவும். உருட்டி போட்ட சீடைகளை சுமார் 15 நிமிடம் காயவைக்கவும்.

பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீடைகளை போட்டு வேகவிடவும். வாணலியின் அளவைப் பொறுத்து போடும் சீடைகளின் எண்ணிக்கை இருக்கலாம்.

எண்ணெய் அடங்கி, சீடைகள் சற்று சிவந்து வந்தவுடன் எடுக்கவும்.

குறிப்புகள்:

டால்டாவின் அளவு அதிகமானால் எண்ணெயில் போட்டு எடுக்கும் போது உடைந்து விடும்.